/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரே இரவில் கொட்டிய 12 செ.மீ., மழை கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் தவிப்பு
/
ஒரே இரவில் கொட்டிய 12 செ.மீ., மழை கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் தவிப்பு
ஒரே இரவில் கொட்டிய 12 செ.மீ., மழை கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் தவிப்பு
ஒரே இரவில் கொட்டிய 12 செ.மீ., மழை கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் தவிப்பு
ADDED : அக் 06, 2025 01:23 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகரில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த, 12 செ.மீ., மழையால், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து, மக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுதும் இரு நாட்களுக்கு முன், 16.6 செ.மீ., மழை பதிவானது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு துவங்கிய கனமழை, அதிகாலை, 4:00 மணி வரை கொட்டி தீர்த்தது.
இதில் கிருஷ்ணகிரி நகரில் மட்டும், 12 செ.மீ., மழை பெய்தது. நகரின் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
உபரி நீர்
கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு லிங்கம்மா ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி, குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. நேதாஜி சாலையை கடந்து ஆசிப் நகர் குடியிருப்பில் ஆறாக ஓடிய தண்ணீரால் அப்பகுதி தீவாக மாறியது. கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார்.
லிங்கம்மா ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்ற உத்தரவிட்டார். கால்வாயை, 2 அடிக்கு உயர்த்தி கட்டவும் நகராட்சிக்கு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், சின்ன ஏரி மற்றும் கட்டிகானப்பள்ளி கரீம்சாயபு ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது.
இது செல்லும் பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து ஆவின் மேம்பாலம் செல்லும் சர்வீஸ் சாலையில் ஆறாக தண்ணீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மேடு பள்ளம் தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கினர்.
கழிவு நீர்
சின்ன ஏரி உபரி நீர் மோகன்ராவ் காலனியில் புகுந்து, தர்மராஜா கோவில் சாலை வழியாக பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில் சென்று, 3 அடி உயரத்துக்கு தேங்கியது. இதனால் அங்குள்ள கடைகளிலும், பஸ் ஸ்டாண்டை சுற்றிய வீடுகளிலும் மழை நீருடன் கழிவுநீர் புகுந்தது.
டவுன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது முதல் ஒவ்வொரு மழையின்போதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. முறையாக கால்வாயை அமைக்காததே இதற்கு காரணம்.
கிருஷ்ணகிரி ராஜிவ் நகரில் மழை நீரால் சாலை சேதமடைந்து குடிநீர் குழாய்களும் உடைந்தன. நான்கு கார்கள் நீரில் மூழ்கின. கிருஷ்ணகிரி காந்தி நகர் மூன்றாவது தெரு மற்றும் செல்லாண்டி நகர், டான்சி வளாக பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர் புகுந்தது.
கிருஷ்ணகிரி - அக்ரஹாரம் சாலை முல்லை நகரில் மழைநீர் தேங்கியது.
அதேபோல் ஆவின் மேம்பாலம் டி.சி.ஆர்., சர்க்கிள் அருகே சர்வீஸ் சாலையோரம் திட்டமிடாமல் கட்டப்பட்ட கால்வாயில் மழைநீர் வெளியேற வழியின்றி, மூன்றடி உயரத்துக்கு தேங்கியது.