/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவியருக்கு 5 நாள் தொல்லியல் பயிற்சி
/
கல்லுாரி மாணவியருக்கு 5 நாள் தொல்லியல் பயிற்சி
ADDED : ஆக 14, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், கல்லுாரி மாணவியருக்கு,
5 நாள் தொல்லியல் பயிற்சி நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மூகாம்பிகை மகளிர் கல்லுாரி இளங்கலை தமிழ், வரலாறு மற்றும் முதுகலை தமிழ், 2ம் ஆண்டு பயிலும், 50 மாணவியருக்கு, 5 நாள் தொல்லியல் பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நடந்து வருகிறது. நேற்று, 4வது நாள் பயிற்சியாக, கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலுக்கு மாணவியர் மரபு நடைபயணம் மேற்கொண்டனர். கோவிலில் உள்ள கல்வெட்டுகள், கோவிலை கட்டியவர்கள் தொடர்பான கருத்துகளை, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் எடுத்துரைத்தார்.
அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், இந்திய கோவில் கட்டட கலையிலிருந்து திராவிட கட்டடக்கலை எவ்வாறு வேறுபட்டுள்ளது, தமிழகத்தின் குடைவரை கோவில், கோவில்களில் உள்ள கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், சிற்பங்களில் உள்ள முத்திரைகள், அமைப்புகளை வைத்து காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரித்தார்.
பின் அரசு அருங்காட்சியகத்திற்கு சென்ற மாணவியருக்கு, புதிய கற்கால கல் ஆயுதம் பயன்பாடு, பாறை ஓவியங்கள், நடுகல், கல்வெட்டுகள், சிற்பங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், கல்லுாரி விரிவுரையாளர்கள் விஷ்வபாரதி, நாகமணி மற்றும் அருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

