ADDED : ஜன 04, 2025 11:03 PM
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பேலகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, முதுகானப்பள்ளி, ஒசபுரம், முகலுார், அச்செட்டிப்பள்ளி ஆகிய ஏழு பஞ்.,க்களில், 2,300 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டரிடம் கடந்த 30ல் விவசாயிகள் மனு கொடுத்தனர். தனியார் சர்வே நிறுவனம், கூகுள் எர்த் வரைபடத்தின் அடிப்படையில், நிள அளவீட்டை ட்ரோன் மூலமாக பதிவு செய்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்.பி., அக்ரஹாரத்தைச் சேர்ந்த விவசாயி சூர்யகுமார் கூறியதாவது:
விமான நிலையம் அமைந்தால், சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர். இங்கிருந்து தான், குடை மிளகாய், பூ ஏற்றுமதி செய்கிறோம். யாரோ விமானத்தில் செல்வதற்காக சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட வேண்டுமா?
நாங்கள் பெரிய ஜமீன்தார்கள் இல்லை. மாற்று இடத்திற்கு செல்லவும் வாய்ப்பில்லை. முதுகானப்பள்ளி பஞ்.,ல் உள்ள ஒட்டர்பாளையம், கோபனப்பள்ளி பஞ்., உட்பட்ட பொம்மசந்திரா, கொல்லிசந்திரம் ஆகிய மூன்று கிராமங்கள் முழுதுமாக அழிக்கப்பட்டு விடும். இப்பகுதியில் விமான நிலையம் கூடாது. படித்த இளைஞர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். நாங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து கொள்கிறோம்.
இவ்வாறு கூறினார்.

