ADDED : ஜூலை 16, 2025 01:40 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி காப்புக்காட்டில், 4 யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 4 யானைகளும் தனித்தனியாக ஆலஹள்ளி காப்புக்காட்டில் இருந்து வெளியேறின.
கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை, விவசாயிகள் விரட்டிய நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணி மற்றும், 5:30 மணிக்கு, மீண்டும் ஒற்றை யானை வந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து வீடுகளில் தஞ்சமடைந்தனர். கிராம சாலையில் ஹாயாக ஒற்றை யானை நடந்து சென்றது. மக்கள் வீடுகளுக்குள் இருந்தவாறு சத்தம் போட்டனர். கிரியனப்பள்ளி, மணியம்பாடி, ஆலஹள்ளி ஆகிய பகுதிகளில், தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் தோட்டத்தை தனித்தனியாக சென்று சேதப்படுத்திய யானைகள், நேற்று காலை வனப்பகுதி நோக்கி சென்றன.