/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயிகளை விரட்டிய ஒற்றை யானை: தப்பிய மூவர்
/
விவசாயிகளை விரட்டிய ஒற்றை யானை: தப்பிய மூவர்
ADDED : டிச 15, 2024 01:05 AM
ஓசூர், டிச. 15-
தேன்கனிக்கோட்டை அருகே, இரவு காவலுக்கு சென்ற மூன்று விவசாயிகளை, ஒற்றை யானை விரட்டிய நிலையில் அறைக்குள் தஞ்சமடைந்து உயிர் தப்பினர்.
தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், 20க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. தாவரக்கரை அருகே கேரட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு சென்ற ஒற்றை யானை, சாகுபடி செய்து நிலத்தில் வைத்திருந்த ராகி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது. இதை பார்த்த இரவு காவலுக்கு சென்ற விவசாயிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை சரியான நேரத்திற்கு வராத நிலையில், பயிர்களை காப்பாற்ற யானைகளை விரட்ட முயன்ற விவசாயிகள் பையப்பா, ரவி, வெங்கடேஷ் ஆகியோரை ஒற்றை யானை விரட்டியது.
அதனால் அருகில் இருந்த ஒரு அறைக்குள், விவசாயிகள் உயிர் தப்பிக்க தஞ்சமடைந்தனர். யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது, வெங்கடேஷ் கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. பின், வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளை விரட்ட விவசாயிகளுக்கு பட்டாசு, டார்ச் லைட் கொடுப்பதில்லை என கூறி, வனத்துறை வாகனத்தை சிறை பிடித்து விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
அங்கு வந்த போலீசார், வனத்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களை சமாதானப்படுத்தி வனத்துறையினரை விடுவித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி மற்றும் நிர்வாகிகள், சேதமான ராகி பயிர்களுக்கு வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.