/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அஞ்செட்டி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
அஞ்செட்டி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 16, 2025 06:22 AM
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரக அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் ரவீந்திரன், செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் முருகேஷ் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில், 'அஞ்செட்டி தாலுகாவில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்யும் நிலங்களில், வனத்துறையினர் அத்துமீறி யானை தடுப்பு பள்ளம் தோண்டும் முயற்சியை கைவிட வேண்டும். வனத்தில் கால்நடை மேய்ச்சல் உரிமையை பாதுகாக்க வேண்டும். பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு நில உரிமை சான்று வழங்க வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.
அஞ்செட்டி தாசில்தார் செந்தில்குமார், வனச்சரகர் கோவிந்தன், டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்று (டிச., 16) பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு செய்வது என கூறப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. மா.கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜூ, அடிமனை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அனுமப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

