/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 01:36 AM
கிருஷ்ணகிரி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தேவி, மாவட்ட செயலாளர் சுஜாதா, மாநில செயற்குழு உறுப்பினர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மஞ்சு நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியின் படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாயும், பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை, உடனே அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வுக்கு பிறகு, அகவிலைப்படியுடன் கூடிய, குடும்ப ஓய்வூதியமாக மாதம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். 1993ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும், 5ஜி மொபைல் போன், சிம் கார்டு மற்றும் வைபை இணைப்பு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

