ADDED : நவ 25, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி,: பண்டிகை கால முன்பணம் கோரி நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஓட்சா கூட்டமைப்பின் மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்தோர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ஓட்சா கூட்டமைப்பில் துாய்மை காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், டேங்க் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் இணைந்து செயலாற்றி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில், 250 டேங்க் ஆப்பரேட்டர்கள், துாய்மை காவலர்கள், 900 பேர் உள்பட, 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
துாய்மை காவலர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக, 20,000 ரூபாய் வழங்குவது வழக்கம். கடந்த, 2024--25ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு முன்பணம் அரசு வழங்கவில்லை. தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பண்டிகை கால முன்பணம் வழங்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதேபோல, டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, 4,800 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2000ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 250 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வழங்குவது போல், ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகை வழங்குவதையும் முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

