ADDED : மார் 07, 2026 09:35 AM
ஓசூர்: மதுரை மாவட்டம், டி.வாடிப்பட்டி அருகே சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கடந்த, 1992 முதல், பல்வேறு விழிப்புணர்வு நடைபயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், வேர்ல்ட்புக் ஆப் ரெக்கார்ட் ஆகியவற்றால் சாதனை சான்றிதழ் பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பஞ்சசீல கொள்கையை ஏற்று, நல்லிணக்க உலக அமைதி ஏற்படவும், மூன்றாம் உலக போர் மற்றும் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போரை தடுத்து நிறுத்தக்கோரியும், ஓசூர் காந்தி சிலையிருந்து, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடம் நோக்கி விழிப்புணர்வு நடை பயணத்தை நேற்று துவங்கினர்.
ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா துவக்கி வைத்தார். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். 100 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொள்ளும் கருப்பையா, நாளை (மார்ச் 8) அல்லது 9ம் தேதி தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சென்றடைவார்.
