/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 576 மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாணவி
/
அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 576 மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாணவி
அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 576 மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாணவி
அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 576 மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாணவி
ADDED : மே 10, 2025 02:03 AM
ஓசூர், ஓசூர் அருகே, அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில், 576 மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியை, கலெக்டர் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சித்தனப்பள்ளியில் உள்ள, டிரண்ட் சிட்டி சஷ்டி அவென்யூ லே அவுட்டில் வசிப்பவர் அகிலன், 50. தனியார் நிறுவன ஊழியர்; இவரது மனைவி சுமித்தா, 44. இவர்களுக்கு ரியாஸ்ரீ, 17, என்ற மகள் உள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், ஓசூர் அருகே பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், 576 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இதையறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மாணவியை நேற்று நேரில் வரவழைத்து, பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேச்சுத்திறனை அதிகரிக்க உதவும் ஒலிப்பதிவு கருவியை கலெக்டர் வழங்கினார். பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தனது விருப்ப நிதியில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாணவிக்கு வழங்கி பாராட்டினார்.
நல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதிய போது, மாணவி ரியாஸ்ரீ பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். அதன் பின், பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாறிய நிலையில், அங்கு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கீ போர்டு வாசித்தலில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான கலைத்திருவிழாவில்
பங்கேற்றார். கல்லுாரி படிப்பை முடித்து, யு.பி.எஸ்.சி., தேர்வெழுதி, ஐ.ஏ.எஸ்., ஆவது தான் தனது லட்சியம் என, மாணவி ரியாஸ்ரீ தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில்,''மாணவி ரியாஸ்ரீயின் உயர் கல்விக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். மாணவிக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, பார்வை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும். மாணவி கல்லுாரி படிப்பை முடித்து விட்டு, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளதால், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தார், முடநீக்கியல் வல்லுனர் பிரகாஷ், பள்ளி தலைமையாசிரியர் தர்மசம்வர்தினி, மாணவியின் பெற்றோர் உடன் இருந்தனர்.