/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கைவிரிப்பு
/
பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கைவிரிப்பு
பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கைவிரிப்பு
பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கைவிரிப்பு
ADDED : அக் 22, 2025 07:50 PM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பொம்மசந்திரா வரை அம்மாநில அரசு மெட்ரோ ரயில் சேவையை துவங்கியுள்ளது. அதனால், பெங்களூருவில் உள்ள ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 12 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, கர்நாடக அரசு ஆலோசிக்கிறது.
ஒசூருக்கு நன்மை ஏற்கனவே, பொம்மசந்திராவிலிருந்து, தமிழக எல்லையான ஓசூர் வரை, மெட்ரோ ரயில் சேவை வழங்க, தமிழக - கர்நாடகா மாநில அரசுகள் பேசி வருகின்றன.
இரு மாநில அதிகாரிகளும் ஆய்வு செய்கின்றனர். கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை அம்மாநில அரசு மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்தால், அங்கிருந்து, 11 கி.மீ., துாரத்தில் ஓசூருக்கு நிச்சயம் மெட்ரோ ரயில் வந்து விடும் என, மக்கள் நம்பினர்.
பொம்மசந்திரா - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை வந்தால், தென் மாநிலங்களிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை என்ற பெருமை உருவாகும். ஆனால், ஓசூர் வரை, மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்தால், பெங்களூருவை விட ஓசூருக்கு அதிக நன்மை கிடைக்கும் என, கர்நாடகா அரசு நினைக்கிறது.
பெங்களூருவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஓசூருக்கு இடம் பெயர வாய்ப்புள்ளதாக கருதுகிறது.
அதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பொம்மசந்திரா - -ஓசூர் இடையே மெட்ரோ ரயில் நேரடி இணைப்பு, 'தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை' என, கர்நாடகா மாநில அரசுக்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பொம்மசந்திரா - ஓசூர் இடையே, 25 கிலோவாட், 'ஏ.சி.,' வகை மின்சாரத்தை பயன்படுத்தி, மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், பெங்களூரு மெட்ரோ ரயில்கள், 750 வோல்ட் 'டி.சி.,' வகை மின்சாரத்தில் இயங்கி வருகின்றன.
மின் அளவு மாறுபாடு இரு மின் அளவு மாறுபாட்டால், ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவையை இயக்குவது கடினம். தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது, பொம்மசந்திரா - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற தமிழக அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
கர்நாடகா மாநில எல்லையான, அத்திப்பள்ளி வரை அம்மாநில அரசு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வரும் பட்சத்தில், 750 வோல்ட் டி.சி., வகை மின்சாரத்தில் மெட்ரோ ரயில் திட்ட தொழில்நுட்பத்தை மாற்றியமைத்தால், அத்திப்பள்ளி - ஓசூர் இடையே இணைப்பு ஏற்படுவது சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.