ADDED : அக் 07, 2026 05:56 AM

ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலையில், அசோக் பில்லர் சர்க்கிள்
அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி
வாடகை குடியிருப்பு உள்ளது.
இங்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி
குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில்,
அப்பகுதி வழியாக பிரம்ம மலைக்கு செல்லும் சாலையோரம் இரு போர்வெல்கள்
உள்ளன.
கடந்த வாரம் ஒரு போர்வெல்லில் இருந்த காப்பர் ஒயர்களை மர்ம
நபர்கள் திருடி சென்றனர். அதேபோல், நேற்று முன்தினம் இரவு, மற்றொரு
போர்வெல்லில் இருந்த காப்பர் ஒயர்கள் திருட்டு போனது. இதனால்,
குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி
பாதிக்கிறது. மேலும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலவு
அதிகரிக்கிறது.
அப்பகுதியில் சமீபத்தில் காப்பர் ஒயர்
திருடியதாக வாலிபர் ஒருவர் பிடிபட்டார். 3 பேர் தப்பியோடினர்.
பிடிபட்ட வாலிபர், தப்பியோடியவர்கள் குறித்த விபரங்களை கூற
மறுத்து விட்டார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆனால்,
திருட்டு சம்பவம் மட்டும் தொடர்வதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில்
உள்ளனர்.
