/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜி.ஹெச்.,ல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
/
ஜி.ஹெச்.,ல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
ADDED : நவ 06, 2025 12:55 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ
மனையில் நடந்த, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் சத்யபாமா தலைமை வகித்து பேசியதாவது:
இந்தியாவில் ஆண்டிற்கு, 1.50 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில், 80,000 பேர் இறக்கிறார்கள். இந்நோய் பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. 12 வயதுக்கு முன்பாகவே பூப்படைதல், 55 வயதுக்கும் மேல் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவது, குழந்தையின்மை, 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெற்றுக்கொள்வது, ஹார்மோன் சிகிச்சையில் இருப்பவர்கள் போன்றோருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், 2 வருடத்திற்கு ஒருமுறை மார்பக எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த மார்பக எக்ஸ்ரே வசதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ளது. நோய் முற்றிய நோயாளிகளுக்கு, வலி மற்றும் ஆதரவு சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இதில் தேவைப்படுபவர்களுக்கு, மருந்து மற்றும் மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆண்டிற்கு, 40 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சையும், 500 மருத்துவ பயனாளிகளுக்கு கிமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் தினேஷ், நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

