/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முடியுமா?
/
ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முடியுமா?
ADDED : ஜன 11, 2024 12:18 PM
கிருஷ்ணகிரி: ''இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்களான மம்தா, லாலு பிரசாத், ஸ்டாலின் ஆகியோரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக முடியுமா,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி
எழுப்பினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், 'என் மண் என் மக்கள்' யாத்திரை நேற்று நடந்தது. பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா வரை நடந்து சென்றார். அப்போது அவருக்கு ஏராளமானோர் வரவேற்பு கொடுத்து, 'செல்பி' எடுத்துக்கொண்டனர். பின் வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் மோடி தமிழ் மொழி, கலாசாரத்தை உலகம் முழுதும் பரப்பி வருகிறார்.
'இண்டியா' கூட்டணியில் உள்ள தலைவர்களான மம்தா, லாலு பிரசாத், ஸ்டாலின் ஆகியோரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக்க முடியுமா? இவர்கள் அனைவரும் ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்தவர்கள்.
தி.மு.க., அரசு பதவி யேற்று, 31 மாதங்களில் நடத்திய ஊழல், கொள்ளை அதிகம். 'மோடியை எதிர்க்க இந்தியாவில் ஆட்களே இல்லை' என, காங்., பிரமுகர் கார்த்திக் சிதம்பரமே
பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்துார், போச்சம்பள்ளி பகுதிகளில், 50,000 ஹெக்டேரில் மாங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, தி.மு.க., அரசு மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி
அளித்தது.
அதேபோல் சாமல்பட்டி, களர்பதி, அத்திப்பள்ளம், மாதம்பதி பகுதிகளில் ஏராளமான பனை, தென்னை மரங்கள் உள்ளன. அதிலிருந்து பதநீர், வெல்லம் தயாரித்து வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் கூறினர். தற்போது வரை செய்யவில்லை.
கடந்தாண்டு பிப்ரவரியில் போச்சம்பள்ளி வந்தேன். அப்பகுதி ராணுவ வீரர் பிரபு, தி.மு.க., டவுன் பஞ்சாயத்து கவுன்சிலரால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு, லட்சம் ரூபாய் வழங்கி, அவரது குழந்தைகளின் கல்வி செலவை
ஏற்றுள்ளோம். ஆனால் தமிழக முதல்வர், கள்ளச்சாராயம் காய்ச்சினால், 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் அரசு மருத்துவமனை நவீனமயமாக்கப்படும்; போச்சம்பள்ளியில் நவீன சூரிய காந்தி எண்ணெய் தொழிற்சாலை, கனிம பொருட்கள், பூக்கள் ஏற்றுமதி நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டது. அதில் ஒன்றை கூட
நிறைவேற்றவில்லை.
மோடி ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 27,213 பேருக்கு மோடி வீடு, 2,45,579 பேருக்கு கழிப்பறை, 1,10,425 குடும்பத்தினருக்கு, 300 ரூபாய் மானியத்துடன் காஸ் சிலிண்டர், 1,54,558 விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் கவுரவ தொகை, 15 தவணை கொடுத்துள்ளார்.
வரும் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் களமிறங்கும் பா.ஜ., வேட்பாளர்கள் அனைவருமே, 'மோடி' என நினைத்து ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், மோடி திட்டங்களால் பயன் அடைந்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மாநில துணைத்
தலைவர் நரேந்திரன், பார்லிமென்ட் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், இணை ஒருங்கிணைப்பாளர் கோபால கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.