தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த 12 பேர் மீது வழக்குப்பதிவு
தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த 12 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 13, 2026 07:40 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே அஞ்செட்டி துர்க்கத்தில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராஜா, கிருஷ்ணகிரி உதவி ஆணையர் ராமுவேல், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை ஆகியோர் தலைமையில் அகற்றும் பணி கடந்த, 9ம் தேதி நடந்தது. அப்போது கோவில் நிலத்தில் இருமாடியுடன் கட்டி வரும் வீட்டை அதிகாரிகள் இடிக்க முயன்றனர்.
அப்போது, நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வரும் கங்கேஷ் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள, 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள், முதல்தளத்தில் நின்று கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றால், பெட்ரோல் ஊற்றியும், கீழே குதித்தும் தற்கொலை செய்வோம் என மிரட்டினர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விடாமல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து, தற்கொலை மிரட்டல் விடுத்த கங்கேஷ் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள, 7 பெண்கள், 4 குழந்தைகள் மீது, கோவில் செயல் அலுவலர் சின்னசாமி புகார் செய்தார். அதன் படி, கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
