/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பாமல் குழந்தைகளின் முன்பருவ கல்வி பாதிப்பு
/
அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பாமல் குழந்தைகளின் முன்பருவ கல்வி பாதிப்பு
அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பாமல் குழந்தைகளின் முன்பருவ கல்வி பாதிப்பு
அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பாமல் குழந்தைகளின் முன்பருவ கல்வி பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 06:42 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களின் காலி பணியிடங்களை நிரப்பாமல் நீண்ட காலமாக இழுத்தடித்து வருவதால், குழந்தைகளின் முன்பருவ கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் என்பது ஐ.சி.டி.எஸ்., என்ற சுருக்கமான பெயரில் அறியப்படுகிறது.
இதன் பராமரிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 507 மினி அங்கன்வாடி மற்றும் 1,289 மெயின் அங்கன்வாடி மையங்கள், 66,000 குழந்தைகளுடன் செயல்படுகின்றன. இங்கு தினமும், 6 மாதம் முதல், 60 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும், மதிய உணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது.அங்கன்வாடி மெயின் மையங்களில், ஒரு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் இருப்பது வழக்கம். மினி மையங்களில் அங்கன்வாடி பணியாளர் மட்டுமே பணியில் இருப்பார். அவரே குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார். மாவட்டத்தில் மொத்தமுள்ள, 1,796 அங்கன்வாடி மையங்களில், 250 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மெயின் மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கூடுதலாக ஒன்று முதல், 2 மையங்களை கவனிக்கின்றனர். இந்த மையங்கள், 5 கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ளதால், தினமும் இரு மையங்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்களால் செல்ல முடியவில்லை. உணவு சமைத்து வழங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அதனால், கூடுதல் மையங்களில், அந்தந்த மையங்களுக்கு வரும் குழந்தைகளின் பெற்றோரில், யாரையாவது கவனிக்க கூறுகின்றனர். வாரத்தில், 2 நாட்கள் மட்டுமே, கூடுதலாக கவனிக்க வேண்டிய மையங்களுக்கு, சென்று வருகின்றனர். இதனால், குழந்தைகளுக்கான முன்பருவ கல்வி மற்றும் பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியாகிறது. அங்கன்வாடி பணியாளர்களின் வேலை பளுவும் அதிகரித்துள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவது போன்ற பணிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கணக்கில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பாமல், மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜெயந்தியிடம் கேட்டபோது, ''காலிபணியிடங்கள் குறித்து, தலைமை செயலத்திற்கு தெரிவித்துள்ளோம். அங்கிருந்து அனுமதி வந்தவுடன், காலிபணியிடங்கள் நிரப்பப்படும்,'' என்றார்.