ADDED : நவ 16, 2024 01:46 AM
கல்லுாரி மாணவி கடத்தல்
கிருஷ்ணகிரி, நவ. 16-
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் ஷர்மி, 21. தனியார் கல்லுாரி ஒன்றில் எம்.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இவர், சின்ன பெலவர்த்தியில் உள்ள தன் மாமா வீட்டில் தங்கி, கல்லூரிக்கு கடந்த மூன்று மாதங்களாக சென்று வந்தார். கடந்த, 14 காலை ஷர்மியை அவரது மாமா சக்திவேல், கல்லுாரியில் விடுவதற்காக பைக்கில் அழைத்து சென்றார்.
புஷ்பகிரி மலை மாதா கோவில் அருகில் சென்ற போது, அந்த வழியாக வந்த பலேனோ கார், பைக்கை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய நபர்கள், ஷர்மியை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இது குறித்து, ஷர்மியின் தந்தை மகாராஜகடை போலீசில் புகாரளித்தார். விசாரணையில், கிருஷ்ணகிரி தாலுகா, தளவாய்ப்பள்ளியை சேர்ந்த பிரசாந்த், 30, என்பவருக்கும், ஷர்மிக்கும் காதல் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.