/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கைது செய்ய எஸ்.பி., ஆபீசில் புகார்
/
கைது செய்ய எஸ்.பி., ஆபீசில் புகார்
ADDED : ஏப் 25, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, பழையபேட்டை என்.எஸ்.கே., தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாபு, 60. இவருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஊர் பெரியவர்கள் முன்னிலையில், அவர்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில் கறிக்கடை வைத்திருக்கும் தஸ்தகீர் என்பவர் குடிபோதையில் வந்து அனைவரையும் திட்டியுள்ளார். மேலும், ஆட்டோ டிரைவர் பாபுவை அடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து கையில் அரிவாளுடன் வந்த தஸ்தகீர், பழையபேட்டை கோட்டை பகுதியில் அரிவாளுடன் சுற்றியவாறு அனைவரையும் மிரட்டியுள்ளார். இது  அங்கிருந்த, 'சிசிடிவி'யில் பதிவானது. கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் தஸ்தகீரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதற்குள் தஸ்தகீர் அரிவாளுடன் சுற்றிய வீடியோ வைரலானது.
நேற்று பாபுவின் குடும்பத்தினர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், தஸ்தகீரை போலீசார் கைது செய்யாமல் விடுவித்து விட்டனர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் எங்கள் பகுதிக்கு போதையில் வந்த தஸ்தகீர், ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி, வீடுகளை அடித்து நொறுக்கி சென்றார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.

