தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்ற 'கை' சின்னத்தில் ஓட்டளியுங்கள்'
தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்ற 'கை' சின்னத்தில் ஓட்டளியுங்கள்'
ADDED : ஏப் 15, 2026 06:00 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., கட்சியை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகர் பகுதியில், 'கை' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வாக்காளர்களிடம் பேசியதாவது:
நான் கடந்த, 2019 முதல், 2024 வரை எம்.பி.,யாக இருந்த போது, ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்திற்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளேன். கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை அமைத்து கொடுத்துள்ளேன். சென்னை - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 6 விபத்து தடுப்பு மேம்பாலங்கள் மற்றும் நடைபாதை மேம்பாலங்களை அமைத்துக் கொடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி பெங்களூரு - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் அனுமதி பெற்றுத் தந்துள்ளேன். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ள நான், தற்போது எம்.எல்.ஏ., பதவிக்காக காங்., சார்பில், 'கை' சின்னத்தில் போட்டியிடுகிறேன். எனக்கு 'கை' சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
அவ்வாறு வெற்றி பெற்றால், 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை, 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 1.31 கோடி பெண்கள் மாதம்தோறும், 1,000 ரூபாயை உரிமைத்தொகையாக பெற்று வருகின்றனர். மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால், இந்த உரிமைத்தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பல்வேறு திட்டங்களில் அடுத்த, 5 ஆண்டுகளில் தமிழகத்தில், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும். எனவே, தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்ற, எனக்கு, 'கை' சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
