/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராமங்களில் களை கட்டிய மாட்டு பொங்கல்
/
கிராமங்களில் களை கட்டிய மாட்டு பொங்கல்
ADDED : ஜன 16, 2025 07:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று மாட்டு பொங்கலையொட்டி, விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டி, வண்ணம் மற்றும் மலர்களால் அலங்கரித்தனர். கிராமபுறங்களில் அதிகாலையில் சூரிய வழிபாடுடன் விளைநிலங்களில் பொங்கல் வைத்தனர்.
அந்தந்த பகுதியிலுள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து, 20க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் பானைகளில் பொங்கல் வைத்தனர். பிற்பகலில் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு மாலை அணிவித்து, குங்குமம், சந்தனம் வைத்து அலங்காரம் செய்தனர். இதையடுத்து பொங்கல் படையலிட்டு, கால்நடைகளுக்கு வழங்கினர்.
தொடர்ந்து கால்நடைகளை ஊர்வலமாக கோவில்களுக்கு அழைத்து சென்று, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக காளைகள், பசுக்களை ஓட விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணகிரி, சந்துார், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டு பொங்கல் விழா நேற்று களை கட்டியது.
* கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, மகாராஜகடையில் மாட்டு பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைக்கும் மாடு, எருமை, ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, வண்ண பொடிகளால் அலங்கரித்து, மஞ்சள், குங்குமமிட்டு அழகு படுத்தினர். அதேபோல், கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரிக்கரை மற்றும் பெரியஏரி மேற்குகோடியிலுள்ள விவசாய நிலத்தில், பொங்கல் வைத்து மாடுகளுக்கு படையலிட்டு குடும்பத்துடன் வழிபட்டனர். படையலை மாடுகளுக்கு உணவாகக் கொடுத்தனர்.இதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகிலுள்ள பெரியமுத்துார், பாறைக்கொட்டாய், நெக்குந்தி, நாகராஜபுரம், அவதானப்பட்டி உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள், தங்கள் வளர்ப்பு ஆடு, மாடுகளை வாய்க்காலில் குளிப்பாட்டி அழகு படுத்தினர். பின்னர் புத்தாடைகள் அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, தங்கள் வளர்ப்பு கால்நடைகளுக்கு படையல் வைத்து வணங்கினர். பின்னர் உறவினர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறினர்.

