ADDED : டிச 17, 2024 01:41 AM
ஓசூர், டிச.
17-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், 4 யானைகள் தனித்தனியாக உள்ளன. அவை இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்கின்றன. நொகனுார் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய ஒற்றை யானை, அப்பகுதியிலுள்ள ராகி, சோளம், துவரை, அவரை தோட்டங்களில் புகுந்து, பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. விவசாயிகள் பட்டாசு வெடித்தும், யானை செல்லாமல் நின்றிருந்தது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின், வனத்துறையினர் யானையை வனப்பகுதி நோக்கி விரட்டினர். யானைகளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் சேதமாகி வரும் நிலையில், அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து
வருகின்றனர்.