ADDED : டிச 09, 2024 07:40 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்பிளாட் பகுதியில் முகாமிட்டிருந்த, 25க்கும் மேற்பட்ட யானைகளை, நேற்று முன்தினம் ஜவளகிரி நோக்கி வனத்துறையினர் விரட்டி சென்றனர். அப்போது, தின்னுார் கிராமத்திற்குள் சென்ற யானைகள், விவசாயிகள் பிரகாஷ், ரவி, கிருஷ்ணாரெட்டி ஆகியோரது விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ராகி, சோளம், துவரை, பீன்ஸ், தக்காளி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன.
பின்னர் அங்கிருந்து வனப்பகுதி நோக்கி சென்றன. நொகனுார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 4 யானைகள் உச்சனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து, பாப்பண்ணா, சென்னீரப்பா, நாகப்பா, பாலு, சிவராஜ் ஆகியோரது நிலங்களில், சாகுபடி செய்திருந்த, ராகி, சோள பயிர்களை சேதப்படுத்தின. யானைகள் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உரிய இழப்பீடு வழங்குவதுடன், யானைகளை கர்நாடகாவிற்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.