/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் பேனர் சரிந்து வாகன ஓட்டி காயம்
/
ஓசூரில் பேனர் சரிந்து வாகன ஓட்டி காயம்
ADDED : மார் 05, 2025 08:21 AM

ஓசூர்: ஓசூரில், பேனர் கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை டூவீலரில் சென்றவர்கள் மீது, பேனர் சரிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழகத்தில் அனுமதியின்றி சாலைகளில் மற்றும் சாலையோர கட்டடங்களில் வைக்கப்படும் பேனர்களால் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த, 2019 செப்.,ல், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர், சாலையில் சென்ற போது அவர் மீது பேனர் சரிந்ததில், தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பலியானார். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த, 2021ல், கண்ணீர் அஞ்சலி பேனர் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். 2023 ல், கோவையில் விளம்பர பலகையை சாலையோரம் நிறுவிய போது, சாரம் சரிந்து, 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பேனர்கள் வைப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து இருந்தாலும், அதை அரசோ, அதிகாரிகளோ பின்பற்றுவதில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பேனர் கலாசாரம் அதிகரித்து வருகிறது. தனியார் கட்டடங்கள், அரசு அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடங்கள் மீது பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள, ஜி.ஆர்.டி., சர்க்கிள் சாலை, அதிக வாகன போக்குவரத்து நிறைந்தது. அச்சாலையோரம், மேம்பாலத்தையொட்டி தனியார் நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பல பேனர்களில் ஒன்று, காற்றில் நேற்று சரிந்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இதில், ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் நிலைதடுமாறி, சாலையில் விழுந்து காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக பின்னால் பெரிய வாகனங்கள் வராததால் உயிர் தப்பினார். பேனர் விவகாரங்களில் அரசு அலட்சியம் காட்டாமல், சாலைகளில் அனுமதியின்றி பேனர் வைப்பதை தடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.