/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரத்தில் ஏறி ரகளை: போதை வாலிபர் மீட்பு
/
மரத்தில் ஏறி ரகளை: போதை வாலிபர் மீட்பு
ADDED : நவ 11, 2025 02:15 AM
பர்கூர், பர்கூரிலிருந்து மத்துார் செல்லும் சாலையில் உள்ள பூசி நாயக்கனுாரில், 100 அடி உயர புளியமரத்தில் நேற்று மதியம், 1:00 மணிக்கு, வாலிபர் ஒருவர் ஏறி கூச்சலிட்டார். அப்போது, என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள். எனக்கு குவாட்டரும், கோழிப்பிரியாணியும் வாங்கி தாருங்கள் என, மக்களை பார்த்து கேட்டுள்ளார்.
பர்கூர் தீயணைப்புத்துறையினர், 100 அடி உயர ஏணி மற்றும் பெரிய வலையை கொண்டு வந்தனர். மாலை, 5:00 மணி வரை, 4 மணி நேரமாக அந்த வாலிபர் மரத்தில் இருந்தவாறு தொந்தரவு கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏறினால், கிளைக்கு கிளை தாண்டி பீதியை ஏற்படுத்தினார். வாலிபரை ஏணி மூலமாக ஏறிச்சென்று, தீயணைப்புத்துறையினர் மீட்டு, கயிற்றால் கட்டி, கீழே விரித்து வைத்திருந்த வலையில் இறக்கினர். அப்போது, வலையை பிடித்திருந்த பொதுமக்கள், வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
மக்களிடமிருந்து வாலிபரை மீட்ட பர்கூர் போலீசார், பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், பர்கூர் அடுத்த ஐகொந்தம்பள்ளி அருகே சென்றாயநாயக்கனுாரில் வசிக்கும் பால்ராஜ், 30, என தெரிந்தது. மது போதையில் இருந்ததால், போலீசாரால் அவரிடம் மேற்கொண்டு விபரங்களை பெற முடியவில்லை.

