ADDED : ஏப் 11, 2026 05:41 AM
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை, டிப்பர் லாரியை மறித்ததால் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகரத்திற்கு உட்பட்ட பெட்ட முகிலாளம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், சாமை ஏரி உள்ளது. இங்கு தினமும் தண்ணீர் குடிக்க யானைகள் வந்து செல்வது வழக்கம். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்
திரியும் கிரி என்ற ஒற்றை ஆண் யானை, நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, தண்ணீர் குடிக்க வந்தது.
அப்போது சாலையில் சென்ற டிப்பர் லாரியை பார்த்த யானை, திடீரென சாலைக்கு ஓடி வந்து லாரியின் முன்னால் சிறிது நேரம் நின்றது. டிரைவர் அதிர்ச்சியடைந்து லாரியை தொடர்ந்து இயக்காமல், முகப்பு விளக்கை மட்டும் எரியவிட்டபடி நிறுத்தினார். சிறிது நேரத்தில் மீண்டும் யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின் லாரி டிரைவர் அங்கிருந்து சென்றார்.
தற்போது கோடை காலம் என்பதால், தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியேறும் யானைகள், பெட்டமுகிலாளம் மற்றும் அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலைகளில் உலா வர வாய்ப்புள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கவனமாக சாலைகளில் செல்லுமாறு, வனத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
