/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இ.எஸ்.ஐ., உச்சவரம்பை உயர்த்த வேண்டும்
/
இ.எஸ்.ஐ., உச்சவரம்பை உயர்த்த வேண்டும்
ADDED : ஜன 22, 2024 12:33 PM
ஓசூர்: இ.எஸ்.ஐ., உச்சவரம்பை உயர்த்த வேண்டுமென, ஓசூரில் நடந்த, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஐ.என்.டி.யு.சி., கவுன்சில், 12 வது மாவட்ட மாநாடு, ஓசூரில் நேற்று நடந்தது. தேசிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜெகநாதன் மாநாட்டை துவக்கி வைத்தார். தேசிய பொதுச்செயலாளர் சஞ்சய்குமார் சிங், கர்நாடகா மாநில தலைவர் லட்சுமி வெங்கடேசன் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக மீண்டும் மனோகரன் தேர்வு செய்யப்பட்டார்.
மாநாட்டில், பாகலுார் ஏசியன் பேரிங் நிறுவன தொழிலாளர்களின் பண பலன்களை உடனடியாக வழங்குவதுடன், நிறுவனத்தை உடனடியாக திறக்க வேண்டும். இ.எஸ்.ஐ., உச்சவரம்பை, 21,000 ரூபாயில் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்தி, 100 படுக்கை வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக, ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, காவேரிப்பட்டணத்தில் புதிய இ.எஸ்.ஐ., மருந்தகங்கள் அமைக்க வேண்டும். உழைக்கும் பெண்களுக்கு தோழி விடுதிகளை ஓசூரில் அமைக்க வேண்டும். ஓசூரிலிருந்து சென்னைக்கு, பெங்களூரு அல்லது சேலம் வழியாக தினசரி ரயில் சேவை வழங்க வேண்டும். பெங்களூரு - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை, கர்நாடகா, தமிழக அரசுகள் விரைவாக பணிகளை துவங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில அமைப்பு செயலாளர் முனிராஜ், துணைத்தலைவர் சொர்ணராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தரராஜன், துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், செயலாளர் பரமானந்த்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.