/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர்-தளி ரயில்வே கேட்டில் சர்க்கிள் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
/
ஓசூர்-தளி ரயில்வே கேட்டில் சர்க்கிள் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
ஓசூர்-தளி ரயில்வே கேட்டில் சர்க்கிள் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
ஓசூர்-தளி ரயில்வே கேட்டில் சர்க்கிள் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 04, 2025 12:47 AM
ஓசூர், ஓசூர் - தளி ரயில்வே கேட்டில், சர்க்கிள் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தளி சாலையை, சிஸ்யா பள்ளி அருகே ரயில்வே தண்டவாளங்கள் குறுக்காக கடந்து செல்கின்றன. அதனால் தினமும், 30 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படும் போது, தளி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், அவ்வழியாக செல்லும் ரிங்ரோட்டிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில், தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, மாநில நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காக, 4,134 சதுர மீட்டர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1,500 சதுர மீட்டர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. கடந்த மாதம், 14ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், இப்பாலத்திற்காக, 90 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க, ஓசூர் - தளி ரயில்வே கேட்டிற்கு மேல், வழக்கமாக அமைக்கப்படுவது போல், உயர்மட்ட மேம்பாலம் தான் அமைக்கப்பட இருப்பதாக, நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கூறப்படுகிறது. வழக்கமான மேம்பாலத்தை அமைத்தால், தளியில் இருந்து வரும் வாகனங்கள், ரிங்ரோட்டில் திரும்ப முடியாது.
தளி சாலையில் மேம்பாலத்தில் இறங்கி, சுற்றி கொண்டு தான் ரிங்ரோட்டிற்கு வர வேண்டிய சூழ்நிலை வரும். அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். அதனால், கோவையில் அவிநாசி சாலையில், ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது போல், சர்க்கிள் (வட்ட) மேம்பாலம் அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைத்தால், ரிங்ரோட்டில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் மேல் பகுதியிலேயே பிரிந்து, ரிங்ரோட்டில் செல்ல முடியும். எதிர்காலத்தை மனதில் வைத்து, சர்க்கிள் மேம்பாலம் அமைக்க வரைபடம் தயார் செய்து, பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.