ADDED : மே 15, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி ூ;தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமியின் நினைவாக ஜூலை, 5ல் உழவர் தின பேரணி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று கிருஷ்ணகிரியில் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்து பேசினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
கூட்டத்தில், முத்தரப்பு கூட்டம் நடத்தி, மாவிற்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை கூடுதலாக, 10 ரூபாய் உயர்த்தி, உற்பத்தி மானியம், 6 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கறவை மாடுகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கொண்டு வர வேண்டும். சங்க நிர்வாகிகளுக்கு சம்பளம் அரசே வழங்க வேண்டும். சத்துணவில் ஆவின்பால் வழங்க வேண்டும். ரேஷனில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். தொடக்க சங்கத்திலேயே பாலை தரம், எடை, பரிசோதித்து, ஒப்புதல் அட்டை வழங்கி பாலை எடுத்துச் செல்ல வேண்டும். ஆவின் ஒன்றியத்தின் காலிப்பணியிடங்களுக்கு சங்க பால் உற்பத்தியாளர் முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும். கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் கால்நடை தீவன தொழிற்சாலை தொடங்கி, விவசாயிகளுக்கு சலுகை விலையில், தீவனம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.