/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூளகிரியில் தீயணைப்பு நிலையம் திறப்பு
/
சூளகிரியில் தீயணைப்பு நிலையம் திறப்பு
ADDED : அக் 17, 2025 01:18 AM
ஓசூர், சூளகிரியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட அட்ரகானப்பள்ளியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசியதாவது: தாலுகாவின் தலைமையிடமாக உள்ள சூளகிரியில், தொழிற்சாலைகள், கிரானைட் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சூளகிரியை சுற்றி மலைகள் உள்ளதாலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதாலும், சாலை விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன. இப்பகுதியின் சுற்றுவட்ட, 15 கி.மீ., துாரத்தில் எந்த தீயணைப்பு நிலையமும் இல்லை. இதனால் விபத்துகள் குறித்த அழைப்புக்கு, விரைந்து வரமுடியாத சூழலும் இருந்தது.
சூளகிரி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 5 ஆண்டுகளில், 27 தீ விபத்துகள் நடந்துள்ளது. மேலும், 29 மீட்பு அழைப்புகள் வரப்பெற்று, 3 மனித உயிர்கள் மற்றும், 7 விலங்குகள் காப்பாற்றப் பட்டுள்ளது. பல்வேறு தரப்பு கோரிக்கையையடுத்து சூளகிரியில் துவக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு நிலையத்தால், விபத்து பகுதிக்கு மேலும் விரைவாக செல்ல முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து அவர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணித் துறை சேலம் மண்டல துணை இயக்குனர் கல்யாண்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர்கள் சக்திவேல், நாகவிஜயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.