/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
/
கோவில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 08, 2024 01:18 AM
கோவில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
கிருஷ்ணகிரி, செப். 8-
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று, மாவட்டம் முழுவதுமுள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும் நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலை சுந்தர விநாயகர் கோவிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், டான்சி வளாகம் செல்வ விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவிலில் தங்கக் கவச அலங்காரத்திலும் விநாயகர் அருள்பாலித்தார்.
காவேரிப்பட்டணம், பேரூஹள்ளி காவாக்கரை தென்பெண்ணை ஆற்றங்கரையிலுள்ள பால தண்டாயுதபாணி கோவில், பர்கூர் வரசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடந்தது.
* ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் மொத்தம், 850க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஓசூர் ராயக்கோட்டை சாலையில், எம்.என்., நற்பணி மன்றம் சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அயோத்தி ராமர் கோவில் போல் செட் அமைக்கப்பட்டு, அதற்குள் ராமர் தோற்றத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நடந்தது. ஓசூர், பாகலுார் சாலை ஸ்ரீநகர் பகுதி இளைஞர்கள் மற்றும் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நீதிபதிகளை கடவுளாக பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக சென்னை உயர்நீதிமன்ற செட் அமைத்து, அதற்குள் நீதிபதி மற்றும் வக்கீல்கள், குமாஸ்தா, டவாலி ஆகிய வேடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சிவசேனா, ஹிந்து ஜனசேனா ஆகிய அமைப்புகள் சார்பில், துவாரகா நகர் போல், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் செட் அமைத்து, அதற்குள் பார்கடலை தேவர்கள், அசுரர்கள் கடைவது போலவும், கண் சிமிட்டும் வகையிலும், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 3 இடங்களிலும் சினிமா கலைஞர்கள் மூலம் செட் அமைக்கப்பட்டுள்ளன.
* கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் வடக்கு மாட தெருவில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினரும், மிலாடி நபி குழு நிர்வாகியுமான அஸ்லம் தலைமையில், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, பழம், இனிப்பு, வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.