/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர்: போக்குவரத்து பாதிப்பு
/
கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர்: போக்குவரத்து பாதிப்பு
கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர்: போக்குவரத்து பாதிப்பு
கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 05, 2025 01:40 AM
ஓசூர், ஓசூரில் பெய்த, 12 செ.மீ., மழையால், வீடுகள், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியில், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், மழைநீர் குட்டை போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பெய்ய துவங்கிய கனமழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதன்படி தமிழகத்திலேயே ஓசூரில் அதிகபட்சமாக, 120 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், நெடுங்கல்லில், 67.20 மி.மீ., பாரூர், 65, கே.ஆர்.பி., அணை, 60.40, போச்சம்பள்ளி, 58, சூளகிரி, 40, சின்னாறு அணை, 38, பெனுகொண்டாபுரம், 36.30, ஊத்தங்கரை, 35.20, கெலவரப்பள்ளி அணை, 30, ராயக்கோட்டை, 28, தேன்கனிக்கோட்டை, 26, பாம்பாறு அணை, 22, கிருஷ்ணகிரி, 20.40, அஞ்செட்டி, 20, என மொத்தம் மாவட்டத்தில், 666.50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
ஓசூர் அருகே திப்பாளம் ஏரி நிரம்பி, ஆர்.ஆர்., கார்டன் குடியிருப்பிலுள்ள ஓடை வழியாக உபரி நீர் வெளியேறியது. ஓடையை துார்வாராமல், கரையை பலப்படுத்தாமல் இருந்ததால், உபரி நீர் அப்பகுதி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, 50க்கும் மேற்பட்ட குடியிருப்பை சூழ்ந்தது. அதனால் மக்கள் இரவில் துாக்கத்தை தொலைத்தனர். அப்பகுதியில் மின்கம்பம் சாயும் நிலையில் இருந்ததால், நேற்று மாலை வரை மின்தடை செய்யப்பட்டு, கம்பத்தை சரி செய்யும் பணி நடந்தது. தாசில்தார் குணசிவா மற்றும் அதிகாரிகள், பொக்லைன் மூலம் கரையை பலப்படுத்தி, தண்ணீர் சாலைக்கு வருவதை தடுத்தனர்.
ஆர்.ஆர்., கார்டன் ஓடையில் சென்ற ஏரி நீர், திப்பாளம் தரைப்பாலம் மீது, பல அடி உயரத்திற்கு சென்றதால், அவசிய தேவைக்கு கூட மக்கள் வெளியே வர முடியாத நிலையில், சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தரைப்பாலத்தில் டிரைவருடன் பிக்கப் வாகனம் இழுத்து செல்லப்பட்டு, மண் திட்டில் சிக்கியது. ஓசூர் தீயணைப்புத்துறையினர், டிரைவரையும் வாகனத்தையும் மீட்டனர். நேற்று காலையில் தரைப்பாலம் மீது ஆகாய தாமரை மற்றும் கழிவால் ஏற்பட்ட அடைப்பை மக்கள் அகற்றினர். நேற்று மதியத்திற்கு மேல் தண்ணீர் வடிந்ததால், தரைப்பாலத்தில்
போக்குவரத்து சீரானது.
நெடுஞ்சாலையில் பாதிப்பு
கனமழையால் சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியில், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், மழைநீர் குட்டை போல் தேங்கியது. அதனால் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையால் பாதிப்பு
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சூடப்பன், 19. ஓசூர் அரசு கலைக்கல்லுாரியில், பி.பி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். இவர், தன் குடும்பத்துடன், நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது கனமழையால் ஆஸ்பெட்டாஸ் சீட் வீட்டின், ஒருபக்க சுவர் இடிந்து, சூடப்பன் மீது விழுந்ததில், அவரின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
குந்துமாரனப்பள்ளி அருகே, போத்தசந்திரத்தை சேர்ந்த மணி என்பவரது வீட்டு சுவர், கனமழைக்கு இடிந்து விழுந்தது. அதேபோல், அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையம் அருகே பூந்தோட்டபள்ளத்தை சேர்ந்த விவசாயி முத்து என்பவரின் கறவை மாடு, இடி தாக்கி பலியானது. ஓசூர் தர்கா சந்திராம்பிகை ஏரி நிரம்பி, கே.சி.சி., நகர் வழியாக உபரி நீர் வெளியேறியது. அப்பகுதியிலும் கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. நவதி, காரப்பள்ளி, அக்ரஹாரம், கசவுகட்டா, பத்தலப்பள்ளி ஆகிய ஏரியும் கனமழையால் நிரம்பியது.
மழை பாதிப்பு குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்
குமாரிடம் கேட்டபோது, ''ஓசூர் அருகே திப்பாளம் ஆர்.ஆர்., கார்டன் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஓடையை துார்வாரி கரையை பலப்படுத்தி தடுப்பு அமைக்க, மதிப்பீடு தயார் செய்யப்படும்,'' என்றார்.