/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கொட்டி தீர்த்த கனமழை
/
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கொட்டி தீர்த்த கனமழை
ADDED : மே 18, 2025 05:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இரவு, 12:00 மணி வரை மழை விட்டு விட்டு பெய்தது.
கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெத்ததாளாப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் குட்டை போல தேங்கியது. இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை முதலே வெப்பண் தணிந்து காணப்பட்ட நிலையில், மதியம் முதல் மீண்டும் மழை துாறியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில், 75 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், பாம்பாறு அணை, 65, கே.ஆர்.பி., அணை, 55.8, போச்சம்பள்ளி, 50, ஊத்தங்கரை, 48, தேன்கனிக்கோட்டை, 42, ஓசூர், 37, கெலவரப்பள்ளி அணை, 35, பாரூர், 35, தளி, 30, ராயக்கோட்டை, 19, நெடுங்கல், 16.4, பெனுகொண்டாபுரம், 15.2, அஞ்செட்டி, 6.5, சின்னாறு அணை, 5, சூளகிரி, 4 மி.மீ., என மாவட்டம் முழுவதும், 538.9 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
தர்மபுரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை முதல் மழை விட்டு விட்டு பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கலில், 73 மி.மீ., பென்னாகரம், 36, மாரண்டஹள்ளி, 27, பாலக்கோடு, 26, அரூர் 13, பாப்பிரெட்டிப்பட்டி, 13, நல்லம்பள்ளி 5, தர்மபுரி, 4, மொரப்பூர், 3 மி.மீ., என மொத்தம், 200 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
* நேற்று மாலை, 6:00 மணி முதல், தொடர்ந்து, 2 மணி நேரம் பெய்த கனமழையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.