ADDED : ஆக 04, 2025 08:39 AM
ஓசூர்: ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரிலுள்ள நாகம்மா கோவிலில், 18ம் ஆண்டு பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், கரகம் உற்சவ விழா கடந்த, 27ம் தேதி துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, கூழ் வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கங்கா பூஜை நடந்தது.
தொடர்ந்து, கோவில் பூசாரி ஜெகன், அம்மன் வேடமணிந்து கரகத்தை தலையில் சுமந்து, மேள, தாளங்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றார். நண்பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (ஆக.4) காலை, 7:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.