'சுயஉதவி குழுவில் உள்ளோரை தொழில் முனைவோராக்குவேன்'
'சுயஉதவி குழுவில் உள்ளோரை தொழில் முனைவோராக்குவேன்'
ADDED : ஏப் 17, 2026 02:25 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும், காங்., கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியான ராசுவீதி, செட்டியம்பட்டி, சேலம் சாலை என பல்வேறு பகுதிகளில், கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு, 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் துாவி, பட்டாசு வெடித்து பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலில் வென்று முதல்வரான பிறகுதான் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கும் மாதம், 1,000 ரூபாய் வழங்கி உள்ளார். மீண்டும் ஸ்டாலின் முதல்வரானால் பெண்களுக்கு மாதம், 2,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவார். மேலும், 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பனில், நீங்கள் விரும்பிய கடைகளில், விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நான் இந்த தொகுதியில் எம்.பி.,யாக இருந்தபோது, கிருஷ்ணகிரி டோல்கேட்டை தனியாரிடம் இருந்து அரசிடம் பெற்றுத் தந்துள்ளேன். தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, 12 மேம்பாலங்களையும், ரயில்வே பாதையின் குறுக்கில், 3 மேம்பாலங்களையும் பெற்றுத் தந்துள்ளேன்.
மீண்டும் ஓட்டளித்து ஸ்டாலினை முதல்வராக்கினால், சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள பெண்களை, தொழில் முனைவோராக முன்னேற்றிடும் வகையில், பிணை ஏதுமின்றி, 5 லட்சம் ரூபாய் வரை, மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். நான் வெற்றி பெற்று ஓராண்டில், இப்பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் சீரமைத்து தரப்படும்.
மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகாதவாறு, பெரியஏரி கால்வாய் புனரமைக்கப்படும். இப்பகுதியில், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
என்னை முழுமையாக நம்புங்கள். மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமையும். எனவே, 'கை' சின்னத்தில் எனக்கு ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
