ADDED : அக் 03, 2025 01:34 AM
'
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி சிவசக்தி நகர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, மகிசாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தத்ரூபமாக பக்தர்களால் நடத்தப்பட்டது. அம்மனால் வதம் செய்யப்பட்ட மகிஷாசுரனை, பக்தர்கள் தீயிட்டு கொளுத்தி, ஆடி, பாடி கொண்டாடினர்.
தொடர்ந்து, நவராத்திரி பண்டிகைக்காக மண்ணால் செய்யப்பட்டு, 10 நாட்கள் பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர், முருகர், சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளை எடுத்து சென்று, அப்பகுதியில் உள்ள ஏரியில் பக்தர்கள் கரைத்தனர். பின்னர், வில்வ மரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதேபோல், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.