/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் வாரந்தோறும் கடைக்கு ரூ.50 வரை வசூல் பிளாஸ்டிக் சோதனையை கசியவிடும் ஊழியர்கள்
/
ஓசூரில் வாரந்தோறும் கடைக்கு ரூ.50 வரை வசூல் பிளாஸ்டிக் சோதனையை கசியவிடும் ஊழியர்கள்
ஓசூரில் வாரந்தோறும் கடைக்கு ரூ.50 வரை வசூல் பிளாஸ்டிக் சோதனையை கசியவிடும் ஊழியர்கள்
ஓசூரில் வாரந்தோறும் கடைக்கு ரூ.50 வரை வசூல் பிளாஸ்டிக் சோதனையை கசியவிடும் ஊழியர்கள்
ADDED : மே 29, 2024 07:37 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 120 டன் அளவிற்கு மக்கும், மக்காத குப்பை சேகரிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை, ஒருமுறை பயன்படுத்தி விட்டு துாக்கி எரியும் பிளாஸ்டிக் குப்பை தான் அதிகம். தடை செய்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் வாரந்தோறும் கடைக்கு, 50 ரூபாய் வரை வசூல் செய்து, அந்த கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள கடைகள், பூ மார்க்கெட்டுகள், மீன் மார்க்கெட்டுகளில், இந்த வசூல் வேட்டை தீவிரமாக நடக்கிறது.
ஓசூர் மாநகர நல அலுவலர் பிரபாகரன், நேற்று பூ மார்க்கெட்டுகளில் பிளாஸ்டிக் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். அங்கு சென்ற ஊழியர்கள் உடனடியாக ஆய்வு செய்யாமல், நீண்ட நேரம் காத்திருந்தனர். விசாரித்தபோது, பூ மார்க்கெட்டிலுள்ள கடைகளில் அவர்கள் வசூல் செய்வதும், அதனால் கடைக்காரர்களுக்கு பிளாஸ்டிக் சோதனைக்கு வரும் தகவலை கசிய விடுவதும் தெரியவந்தது.
நீண்ட நேரத்திற்கு பின், ஊழியர்கள் உள்ளே சென்றபோது, பெரும்பாலான கடைகளில் வழக்கத்திற்கு மாறாக பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில், பேப்பர் பயன்படுத்தப்பட்டன. மாமூல் வழங்காத, ஒரு சில கடைகளில் மட்டும், 7 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் சிக்கின.
இது பற்றி ஓசூர் மாநகர நல அலுவலர் பிரபாகரனிடம் கேட்ட போது, ''கடைகளில் ஊழியர்கள் பணம் வாங்கியது குறித்து விசாரிக்கிறேன். உண்மை என தெரியவந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.