/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : அக் 24, 2024 01:06 AM
750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி, அக். 24-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பேரிகை பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கணிமங்கலம் என்ற ஊரில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், திருமலைக்கோவில் மைதானத்தில், மாடு கட்டி வைத்திருந்த, 750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை கண்டுபிடித்தார்.
இதை, ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்து கூறியதாவது: பூர்வாதராயர்கள் என்னும் குறுநில தலைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சிற்றரச பரம்பரையினர். இவர்கள் பிற்கால சோழர்கள் காலத்தில், சிறு தலைவர்களாய் இருந்து ஒய்சாளர்களின் காலத்தில், ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளை ஆளும் மகாமண்டலீஸ்வரர்களாக இருந்தனர்.
சின்னக்கொத்துார், மேல்சூடாபுரம், பேரிகை போன்ற இடங்களில் உள்ள கோவில்களை கட்டி, பல்வேறு தானங்களை வழங்கினர். இவர்களில் ஒரு முக்கிய தலைவர் பூமிநாயக்கன் என்பவரின் கல்வெட்டைத்தான், கணிமங்கலத்தில் கண்டறிந்துள்ளோம்.
இவர், இப்பகுதியின் மகாமண்டலீஸ்வரனாக இருந்தபோது, கணிமங்கலம் என்ற ஊருக்கு பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என்ற தன் பெயரை வைத்து, அதை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இன்றும் இக்கிராமத்திற்கு, கணிமங்கலம் என்ற பெயரே உள்ளது. இவ்வூரை சேர்ந்த தலைவர்கள் சிலர், அப்போதைய அத்திசமுத்திரத்தில் (தற்போது அச்சேந்திரம் என்று வழங்கப்படுகிறது) உள்ள பெருமாள் கோவிலுக்கு தானம் வழங்கியதை அக்கோவில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இன்றும் இவ்வூரில், கோட்டை என்ற பகுதி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்
படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்,
விஜயகுமார் உள்பட பலர்
உடனிருந்தனர்.