மக்கள்தொகை கணக்கெடுப்பில் தரவுகளை முழுமையாக பதிவேற்ற அறிவுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுப்பில் தரவுகளை முழுமையாக பதிவேற்ற அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2026 02:57 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பில், எந்தவொரு மக்களும் விடுபடாமல், தரவுகளை முழுமையாக பதிவேற்றம் செய்ய, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த, மூன்று நாள் பயிற்சி வகுப்பை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு, மூன்று நாட்கள் நடக்கிறது. 15-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த, 2011-ல் நடந்தது. 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றினால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது, 2026-ல், 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின், முதற்கட்டம் நடக்க உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் ஆக.,1 முதல், 31 வரை நடக்கிறது. அதற்கு முன், சுயக்கணக்கீட்டு பணி ஜூலை, 17 முதல், ஜூலை, 31 வரை நடக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடக்க உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிக்கு தாசில்தார், நகர பகுதிக்கு டவுன் பஞ்., செயல் அலுவலர், நகராட்சி கமிஷனர் ஆகியோர் என, 15 பொறுப்பு அலுவலர்கள் பணி அமர்த்தப்படுவர். கணக்கெடுப்பாளர்கள் தங்கள் சொந்த மொபைல் போனில், மென்பொருள் பதிவிறக்கம் செய்து வீடு, வீடாக சென்று, கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.கணக்கெடுப்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும், பொறுப்பு அலுவலர்கள் அலுவலகத்திற்கு வரும். மாவட்டத்தில் எந்தவொரு மக்களும் விடுபடாமல், தரவுகளை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
