/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டி தி.மு.க., வினர் ஆர்வம்
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டி தி.மு.க., வினர் ஆர்வம்
ADDED : செப் 05, 2011 11:47 PM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க.,வினர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் நேற்று, விண்ணப்பங்களை வழங்கினர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, அனைத்து அரசியல் கட்சியினரும் அந்தந்த மாவட்ட தலைமையிடம் விண்ணங்களை வழங்கி வருகின்றனர். தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், நேற்று (5ம் தேதி) முதல் விருப்ப மனுக்களை வழங்க கட்சி தலைமை அறிவித்திருந்தது. நகராட்சி தலைவருக்கு போட்டியிட விரும்புகிறவர்கள், 10 ஆயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 2,000 ரூபாயும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு 2,000 ரூபாயும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 500 ரூபாயும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு, 5,000 ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள், 1,000 ரூபாயும் கட்டணமாக விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிட விரும்புவோர் அறிவிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து, 50 சதவீத கட்டணம் செலுத்தினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகராட்சி மற்றும் காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, மத்திகிரி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிட ஏராளமான தி.மு.க.,வினர் நேற்று விண்ணப்பங்களை அளித்தனர். மேலும் ஊத்தங்கரை, ஓசூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், சூளகிரி, தளி, பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடவும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவும், தி.மு.க.,வினர் விண்ணப்பங்களை வழங்கினர். விண்ணப்பங்கள் வரும் 12ம் தேதி வரை பெறப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ., செங்கை சிவம், மாவட்ட பொருளாளர் முருகன், அவைத்தலைவர் வெங்கடேசன்,நகர செயலாளர் நவாப் ஆகியோர் விண்ணப்பங்களை பெற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமலைசெல்வன், நாகரசம்பட்டி பேரூர் செயலாளர் தம்பிதுரை, ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.