/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர்களக்கு அறிவியல் விருது வழங்கல்
/
மாணவர்களக்கு அறிவியல் விருது வழங்கல்
ADDED : ஜூலை 19, 2011 12:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டத்தில் மாவட்ட அளவில் விருதினை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் மகேஸ்வரன் பரிசு வழங்கி கவுரவித்தார். அறிவியல் அறிவு ஒரு நாட்டின் செல்வ வளர்த்திற்கு அடிப்படை காரணிகளில் ஒன்றாகும். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முதுகெலும்பாய் விளங்குவது அடிப்படை அறிவியலில் தொடர்ந்து நிகழும் முன்னேற்றங்களே ஆகும். பொதுவாக நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த போதிலும் அறிவியலில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை தவிர்க்க அரசு புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் இளம் வயதில் அறிவியல்பால் ஈர்க்கும் இத்திட்டத்தில் இணையும் மாணவ, மாணவிகளுக்கு 'இன்ஸ்பயர் விருது'கள் வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரையிலும் படிக்கும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அறிவியலில் ஆர்வம் மிக்க மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதும் 5,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சி போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பின்னர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடக்கும் அறிவியல் போட்டிகளில் இந்த மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இந்த செயல்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பணிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் 2010-11ம் ஆண்டுக்கு 14,896 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 492 மாணவர்கள் 'இன்ஸ்பயர் விருது'க்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் மகேஸ்வரன் பராட்டி பரிசுகள் வழங்கினார். ''ஏழை மாணவர்களும் பிறருடன் சரி சமமாக போட்டிகளில் பங்கேற்று தம் அறிவியல் திறன்களை வெளிபடுத்த இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். எதிர்காலத்தில் அறிவியல் ஆய்வு பணிகளை தங்கள் வாழ்க்கை முறையாக மாற்றி பல்லாயிர கணக்கான மாணவ, மாணவிகள் அறிவியல் துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்துவார்கள்,'' என தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர் சவுந்திரராஜன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.