/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெங்களூரு - சென்னை ஆறு வழிச்சாலை சர்வே துவக்கம் :சாலை அகலப்படுத்த மரங்கள் அகற்றம்
/
பெங்களூரு - சென்னை ஆறு வழிச்சாலை சர்வே துவக்கம் :சாலை அகலப்படுத்த மரங்கள் அகற்றம்
பெங்களூரு - சென்னை ஆறு வழிச்சாலை சர்வே துவக்கம் :சாலை அகலப்படுத்த மரங்கள் அகற்றம்
பெங்களூரு - சென்னை ஆறு வழிச்சாலை சர்வே துவக்கம் :சாலை அகலப்படுத்த மரங்கள் அகற்றம்
ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
ஓசூர் :பெங்களூரு - சென்னை நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படுவதையொட்டி ஓசூர்-கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நேற்று முகாமிட்டு சர்வே செய்தனர். இந்தியாவில் சாலைகள் எக்ஸ்பிரஸ் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், கிராம புற சாலைகள் என ஐந்து வகையாக அமைந்துள்ளன. இந்தியாவில் 33 லட்சம் கி.மீ., தூரம் சாலைகள் செல்கிறது. தமிழகத்தில் 4,832 கி.மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலைகள், 9,384 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள், கிராம புற சாலைகள் உள்ளன. இவற்றில் கன்னியாகுமரி - பெங்களூரு நான்கு வழிச்சாலை, சென்னை - பெங்களூரு நான்கு வழிச்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாக உள்ளன. இந்த இரு சாலைகளும் ஓசூர்-கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலையில் இணைகின்றன. இதனால், ஓசூர்-கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலை வடமாநிலங்களையும், தென்மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்கும் நுழைவுவாயில் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.
இந்த சாலையில் சரக்கு லாரிகள், பயணிகள் வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாகவும், நெரிசலாக காணப்படுகிறது. கடந்த சில ஆண்டாக நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் அதிகளவு விபத்துகள் நடக்கிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் விபத்துகள் அதிகம் நிகழும் நான்கு வழிச்சாலைகளை ஆறுவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு-சென்னை நான்கு வழிச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தமிழகத்தில் மொத்தம் 331 கி.மீ., தூரம் காணப்படுகிறது. இந்த சாலையில் முதற்கட்டமாக பெங்ளகளூரு - அத்திப்பள்ளி வரையுள்ள 33 கி.மீ., சாலை, அத்திப்பள்ளி-ஓசூர் வரையுள்ள 16 கி.மீ., சாலை மற்றும் ஓசூர்-கிருஷ்ணகிரி வரையுள்ள 45.4 கி.மீ., தூரம் ஆறுவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கப்பட்டுள்ளது.இதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள், கான்டிராட்க் நிறுவன அதிகாரிகள் கடந்த சில நாளாக ஓசூர் பகுதியில் முகாமிட்டு நான்கு வழிச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்றுவதற்கு தேவையான ஆய்வுகள் மற்றும் சர்வே மேற்கொண்டுள்ளனர்.
ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்காக பெங்களூரு-சென்னை நான்கு வழிச்சாலையோரங்களில் உள்ள மரங்களை தொழிலாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஓசூர் பகுதியில் உள்ள மூக்கண்டப்பள்ளி, சிப்காட் உள்ளிட்ட பகுதியில் நான்கு வழிச்சாலையையொட்டி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை தொழிலாளர்கள் கடந்த சில நாளாக முகாமிட்டு வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''முதற்கட்டமாக பெங்களூரு-கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. அதன்பின் கிருஷ்ணகிரி-வாணியம்பாடி, வாணியம்பாடி-ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை-காஞ்சிபுரம், காஞ்சிபுரம்-சென்னை பூந்தமல்லி ஆகிய சாலைகள் படிபடியாக ஆறுவழிச்சாலையாக மாற்றப்படுகிறது, '' என்றார்.