/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீண்டிய பாம்பை அடித்து கொன்ற வாலிபர்
/
தீண்டிய பாம்பை அடித்து கொன்ற வாலிபர்
ADDED : ஜூலை 29, 2011 11:34 PM
கிருஷ்ணகிரி : ராயக்கோட்டையில் மலைபாம்பு என்று நினைத்து கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த வாலிபரை பாம்பு தீண்டியது.
ஆத்திரமடைந்த அவர் பாம்பை பிடித்து தரையில் அடித்து கொன்றார்.ராயக்கோட்டையை சேர்ந்தவர் புளி வியாபாரி வெங்கடாசலம் (36). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் மேய்சலுக்கு சென்றிருந்த மாடுகளை பிடித்து கொட்டகையில் கட்டியுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள பாறை இடுக்கில் பெரிய அளவிலான பாம்பு ஒன்று அசையாமல் படுத்திருந்தது.ராயக்கோட்டை பகுதியில் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் மலைபாம்புகள் வருவது வாடிக்கையாகியுள்ளது. எனவே பாறை இடுக்கில் படுத்திருப்பது மலைபாம்பு என எண்ணிய வெங்கடாசலம் பாம்பின் வால் பகுதியை பிடித்து இழுத்தார். அப்போது சீறிய பாம்பு வெங்கடாசலத்தின் கையை கடித்தது.ஆத்திரமடைந்த வெங்கடாசலம் பாம்பின் வாலை பிடித்து தரையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பாம்பு சம்பவ இடத்தில் இறந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வெங்கடாசலத்தின் கை வீங்கியுள்ளது.
உடனடியாக அவர் ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.