ADDED : ஜூன் 27, 2024 03:50 AM
உலக சுற்றுச்சூழல் தினம்
மரக்கன்று நடும் விழா
கிருஷ்ணகிரி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாட்டாண்மைக்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. அறம் விதை அறக்கட்டளை மற்றும் நீரின்றி அமையாது உலகு அறக்கட்டளை இணைந்து பள்ளிக்கு, 100 மரக்கன்றுகளை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். பஞ்., தலைவி எல்லம்மாள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கன்னியம்மாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மனைவியை கடத்தி விட்டதாகபோலீசில் கணவர் புகார்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரை சேர்ந்தவர் ராஜேஷ், 30; இவர் மனைவி ஐஸ்வர்யா, 27; இவர்களுக்கு, 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். ராஜேஷ் புதுவையிலுள்ள பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊரில் வசித்து வந்த மனைவி ஐஸ்வர்யா கடந்த, 23ல் மாயமானார்.
ஐஸ்வர்யாவை, மத்துார் அடுத்த, மந்திப்பட்டியை சேர்ந்த ஊர் கவுண்டர் கணேசன், 50, என்பவர் கடத்திச்சென்று விட்டதாக, மத்துார் போலீசில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தன் கணவர் கணேசனை
காணவில்லை என, அவர் மனைவி அமுதா, 47, புகார் அளித்துள்ளார். இப்புகார்களின் அடிப்
படையில், மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கே.ஆர்.பி., அணைக்குமழையின்றி நீர்வரத்து சரிவு
கிருஷ்ணகிரி: போதிய மழையின்றி கிருஷ்ணகிரி
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்பின் மழையின்றி நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த, 24ல் அணைக்கு வினாடிக்கு, 292 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் போதிய மழையின்றி நேற்று, 184 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்காலில், 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 48.75 அடியாக நீர்மட்டம் இருந்தது. கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 48 அடியை எட்டினால், பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக முதலில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், பெரிய ஏரி நிரம்பி, 17 நாட்கள் கடந்தும், இதுவரை தண்ணீர் திறக்காத நிலையில், கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 48 அடியை கடந்துள்ளது. எனவே, 2 இடங்களிலும் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க, தமிழக முதல்வர் விரைந்து அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.