ADDED : அக் 14, 2025 02:07 AM
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் அருகே உள்ள வெங்கடேஸ்வரா லே அவுட்டில், 120 குடும்பங்கள் வசிக்கின்றன. நேற்று மாலை, 4:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சாலையில், பூனை குட்டி போன்ற ஏதோ ஒரு விலங்கு ஓட, அதை பார்த்த தெரு நாய்கள் விரட்டின.
அப்பகுதியிலுள்ள காலி இடத்திற்குள் ஓடிய அது, காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து, மறுபுறம் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது. இதை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்தனர். அதை பார்த்த போது, சிறுத்தை குட்டி போல் இருந்தது. இதனால், ஓசூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து, சிறுத்தையின் காலடி தடம் ஏதும் உள்ளதா என பார்த்தனர்.
ஆனால், காலடி தடம் ஏதும் சிக்கவில்லை. அதனால் வந்தது காட்டு பூனையாக இருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். ஆனாலும், சிறுத்தை என, பொதுமக்கள் தரப்பில் கூறுவதால், அப்பகுதியினர் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.