ADDED : ஆக 27, 2025 01:37 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த கொத்தனுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 31, கார் டிரைவர். நஞ்சாபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத், 39; ஓசூர் சின்ன எலசகிரி மஞ்சுநாத், 38; கொத்துாரை சேர்ந்த சுக்ரீவன், 44; இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. விஜயகுமாரிடம் இரண்டு லட்சம் ரூபாயை நஞ்சாபுரம் மஞ்சுநாத் கடன் வாங்கினார். விஜயகுமார் திரும்ப கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மஞ்சுநாத்துடன் இருந்த சுக்ரீவன், விஜயகுமாரை கத்தியால் குத்தினார். இந்த சம்பவம், 2019 ஆக., 17ம் தேதி இரவு நடந்தது. இதில் படுகாயமடைந்த விஜயகுமார் இறந்தார்.
சுக்ரீவன், மஞ்சுநாத் மற்றும் மற்றொரு மஞ்சுநாத் என மூன்று பேரை மத்திகிரி போலீசார் கைது செய்தனர். ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி சந்தோஷ் நேற்று தீர்ப்பளித்தார். சுக்ரீவனுக்கு, ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். நஞ்சாபுரம் மஞ்சுநாத், சின்ன எலசகிரி மஞ்சுநாத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகினார்.