ஓசூர்: பேரிகை அருகே, மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், தாயும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கி மீனன்தொட்டியை சேர்ந்தவர் பசவராஜ். இவர் மனைவி ராணியம்மா, 41. இவர்களுக்கு, வெங்கட்ராஜ், 19, என்ற மகன் மற்றும் இரு மகள்கள். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. வெங்கட்ராஜ் தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படித்து வந்தார். பசவராஜிற்கும், அப்பகுதியை சேர்ந்த ராதாம்மா என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த மனைவி ராணியம்மா கணவரை கண்டித்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று மாலை ஏற்பட்ட தகராறில், மனைவி ராணியம்மாவை, பசவராஜ் அடித்துள்ளார். இதை பார்த்த அவரது மகன் வெங்கட்ராஜ் கேள்வி கேட்கவே, மகனையும் அடித்துள்ளார். அடிக்கடி தந்தை தகராறு செய்வதால் மனமுடைந்த வெங்கட்ராஜ், நேற்றிரவு, 7:00 மணிக்கு வீட்டின் முதல் தளத்திலுள்ள அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்த அவரது தாய் ராணியம்மா, ஒரே மகன் இறந்து விட்ட அதிர்ச்சியில், வீட்டின் அருகே இருந்த புளியமரத்தில் இரவு, 8:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரிகை போலீசார் சடலங்களை மீட்டு விசாரிக்கின்றனர்.