ADDED : ஏப் 04, 2026 07:05 PM
கிருஷ்ணகிரி: உடல்நலம் பாதித்த தாய், 8 வயது மகனுடன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் மாயவன், 41; லாரி டிரைவர். இவரது மனைவி லட்சுமி, 31. இவர்களது மகன் ஹேமந்த், 8. சில மாதங்களுக்கு முன், முடக்கு வாத நோயால் லட்சுமி பாதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மாயவன், பெங்களூருக்கு பணிக்கு சென்றார். நேற்று காலை, மாயவன் வீட்டிலிருந்து, 100 அடி தொலைவில் உள்ள ஆதித்யன் என்பவருக்கு சொந்தமான கிணறு அருகே ஹேமந்தின் செருப்புகள் கிடந்தன.
அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கிணற்றில் தேடியபோது லட்சுமி, ஹேமந்த் இருவரும் நீரில் சடலமாக மிதந்தனர். உடல்நல பாதிப்பால் ஏற்பட்ட விரக்தியில் லட்சுமி, தன் மகனுடன் தற்கொலை செய்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
