/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை; மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு
/
மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை; மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு
மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை; மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு
மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை; மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு
ADDED : ஏப் 14, 2025 07:18 AM
அஞ்செட்டி: அஞ்செட்டி அருகே, 3 மலை கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால், மாணவ, மாணவியரின் கல்வி பாதித்து, பள்ளி இடைநிற்றல் அதிகமாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து, 3 கி.மீ., தொலைவிலுள்ள கடுகுநத்தம் மலை கிராமம் வரை, தார்ச்சாலை வசதி உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. அதேபோல், கடுகுநத்தம் கிராமத்தில் இருந்து, 3 கி.மீ., தொலைவிலுள்ள திம்மானட்டி மற்றும் அங்கிருந்து, 1.5 கி.மீ., தொலைவிலுள்ள வரதேகவுண்டன்தொட்டி கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி இல்லை. இப்பகுதிகளுக்கு தார்ச்சாலை வசதி செய்து, அஞ்செட்டியில் இருந்து கடுகுநத்தம் வழியாக வரதேகவுண்டன்தொட்டி வரை, அரசு டவுன் பஸ் இயக்க, மக்களின் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்த அரசும் இதை கண்டு கொள்ளவில்லை. திம்மானட்டி மற்றும் வரதேகவுண்டன்தொட்டி மலை கிராம மக்கள், கரடிக்கல் செல்ல சாலை வசதி உள்ளது. அங்கிருந்து அஞ்செட்டி செல்ல பஸ் வசதி உள்ளது. ஆனால், 9 கி.மீ., துாரத்திற்கு மேல் சுற்றி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால் காலநேரம் விரயமாகிறது.
கரடிக்கல், திம்மானட்டி, வரதேகவுண்டன்தொட்டி ஆகிய, 3 கிராம மக்களும், உயர் கல்விக்காக அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தான் வர வேண்டும். கல்லுாரி படிப்பை தொடர, தேன்கனிக்கோட்டை அல்லது ஓசூருக்கு தான் செல்ல வேண்டும். பஸ் வசதி இல்லாததால், யானை நடமாட்டமுள்ள பகுதியில், உயிரை பணயம் வைத்து தான், மாணவ, மாணவியர் நடந்து அஞ்செட்டி சென்று வருகின்றனர்.
இது குறித்து, மூன்று கிராம மக்கள் கூறுகையில், 'பஸ் வசதி இல்லாததால், 8ம் வகுப்பிற்கு பின், பள்ளி செல்ல முடியாமல் மாணவ, மாணவியரின் கல்வி பாதித்து, பள்ளி இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இக்கிராமங்களில் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் தான். கடுகுநத்தம் மலையிலுள்ள சித்தர் மலைக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வர். எனவே, தமிழக அரசு கடுகுநத்தம் மலை கிராமம் வழியாக வரதேகவுண்டன்தொட்டி கிராமம் வரை பஸ் வசதியோ அல்லது, மினி பஸ் வசதியையோ செய்து கொடுக்க வேண்டும்' என்றனர்.