செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 13, 2026 05:28 AM
ADDED : நவ 13, 2026 05:02 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜாத்தி தலைமை வகித்தார். செயலாளர் பிரபு, பொருளாளர் சிந்து, சங்க உறுப்பினர் மஹாலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிதாக பணி நிரந்தரம் செய்யப்படும் செவிலியர்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், 6,500 செவிலியர்களையும், நிரந்தர செவிலியர்கள் பெறும் முழுமையான காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களையும் எம்.ஆர்.பி., மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு செவிலியர் கல்லுாரிகளில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் போதகர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
