ADDED : ஆக 21, 2025 01:47 AM
ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில் இயங்கி வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, ராயக்கோட்டை சாலையில் உள்ள காரப்பள்ளி அருகே, 100 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
அப்பணி முடிந்தவுடன், முழுமையாக அரசு மருத்துவமனையாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கி.மீ., தொலைவில் உள்ள புதிய கட்டடத்திற்கு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால், நகர் பகுதிக்குள் உள்ள மக்கள் சிரமப்படுவார்கள்.எனவே, முழுமையாக மருத்துவமனையை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதை கண்டித்தும், ஷேர் ஆட்டோ வசதி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் துரை தலைமையில், ஓசூர் ஒன்றிய அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகி சீனிவாசலு உட்பட பலர் பங்கேற்றனர்.

